×

பெர்த்தில் கோஹ்லி, ரகானே அரைசதம் : இந்தியா வலுவான அடித்தளம்

பெர்த்: பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் சேர்க்க, பதிலுக்கு இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களுடன் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. கோஹ்லி, ரகானே அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடக்கிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்தது. கேப்டன் பெய்ன் 16, கம்மின்ஸ் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச, எஞ்சிய 4 விக்கெட்டுகள் 49 ரன்னில் சரிந்தன. பெய்ன் (38) பூம்ரா பந்தில் எம்பிடள்பியூ ஆனார். கம்மின்ஸ் (19) உமேஷ் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார். ஸ்டார்க் (6), ஹேசல்வுட் (0) இஷாந்த் வேகத்தில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 4, பூம்ரா, உமேஷ் யாதவ், விஹாரி தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இம்முறையும், கே.எல்.ராகுல், முரளிவிஜய் ஜோடி மோசமான தொடக்கத்தையே தந்தது.

முரளிவிஜய், ஸ்டார்க் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் (2) ஹேசல்வுட்டிடம் சரணடைந்தார். இக்கட்டான கட்டத்தில் கேப்டன் கோஹ்லி, புஜாரா ஜோடி சேர்ந்தனர். புஜாரா மிக நிதானமாக ரன் சேர்க்க, கோஹ்லி ஸ்டைலான ஷாட்களுடன் ரன் சேர்த்தார்.ஆனால் இந்த ஜோடியும் அதிக நேரம் தாக்குபிடிக்கவில்லை. புஜாரா 24 ரன்னில் ஸ்டார்க் வேகத்தில் வெளியேறினர். அதைத்தொடர்ந்து கோஹ்லி, ரகானே ஜோடி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தது. ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட இவர்கள்  அரைசதம் அடித்து, வலுவான அடித்தளத்தை அமைத்தனர்.
2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களுடன் உள்ளது. கோஹ்லி 82, ரகானே 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய அணி 154 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kohli ,Rakane Hari ,Perth ,India , Perth Test, Australia, India, Kohli, Rakane
× RELATED உரிமம் ரத்து செய்யப்பட்ட பொருட்களை...